Sunday, April 8, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.
வட்டப்பேந்தா

 விளையாட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக் கோட்டிற்குள் உருட்டி யாடுங் கோலியாட்டு வகை வட்டப் பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.

ஆடுவார் எண்ணிக்கை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின் மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.

ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொரு வனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவாவது இருத்தல் வேண்டும்.

ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுவில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும்.

கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில்,  உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

ஆடிடம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை
நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். 

கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்து விட்டால்,  எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.

ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்ட பின், முந்தி யாடு கிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்துவிடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லா வற்றை யும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; 

அடிப்பின்,  பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். 

உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன்.

அதனால் அடுத்தவன் ஆட நேரும்.மூடி பொதுவாக முதலிற் போடப்படுவ தில்லை. பலமுறை சொல்லியுங் கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப் பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.

உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.

முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்டத்தி னின்று வெளியேறிவிடல் வேண்டும்.
அங்ஙனம் வெளியேறி விடின் அது ஒரு வெற்றியாம். குழியிற் போட்டாலும் காயடித் தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய்
கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்து விடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விரு காய் கொடுத்துவிடல் வேண்டும்.முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக் காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும்
திரும்பியாடுவான்.

குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல் போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தை விட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம்
கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். 

குழியிற் போட்ட விடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்து விட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். 

அவன் கெலித்துவிடின், அப் பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக் கிறவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள்
பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும் வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டே யிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.

ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.

எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதி யாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்ட வெல்லாம் கெலிப்புக் காயாகும்.

ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.

                                                                                                                    தொடரும்...............

Saturday, April 7, 2012

நாம் யார் -44

பாகம்-43 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இன்று பிராமணியத்தை நடத்தி வருபவர் தமிழரே

பண்டை நாளில், பிராமணர் தம் வெண்ணிறத்தாலும் வேதமந்திர வெடிப்பொலி யாலும் வேறு வழியாலும் மூவேந்தரையும் வயப்படுத்தி, அவர் வாயிலாகத் தம் கொள்கையைப் பொதுமக்களிடம் வலிந்து புகுத்தினர். இக்காலத்தில், சில கட்சித் தலைவரையும் சில செல்வரையும் துணைக்கொண்டு, தம் கருமத்தை முடிக்கப் பார்க்கின்றனர்.

ஆயினும், அவருள்ளும் ஒள்ளிய மனமும் தெள்ளிய அறிவு முடையார் உளர். தமிழரெல்லாரும் நல்லவரல்லர்; பிராமண ரெல்லாரும் தீயவரல்லர். திருவதங் கோட்டில் (Travancore) தீண்டாதார்க்கு முதன் முதல் திருக்கோவில்களைத் திறந்து விட்டவர் (C.P.) இராமசாமி ஐயரே. வரலாற்று நூல் தமிழ்த் தொண்டருள் தலை சிறந்த மூவர் பிராமணரே.

சின்னஞ்சிறு தொகையினரும் போர் மறமும் வல்லுடம்பும் இல்லாத வருமான பிராமணர், காட்டிக் கொடுக்கும் போலித் தமிழருதவியின்றித் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாக எதுவுஞ் செய்ய முடியாது.

முத்தமிழ்க் காவலர்

(1) தவத்திருக் குன்றக்குடி யடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், கட்டாய இந்திக் கல்வியைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுதும் இடைவிடாது அல்லும் பகலும் இனிய தமிழிற் சொற்பொழிவாற்றியும், ஆண்டுதோறும் பறம்புமலையிற் பாரிவிழா நடாத்திப் பாரி புகழைப் பரப்பிப் பல் புலவர்க்குச் சிறப்புச்செய்தும், திருக் கோவில் களில் தமிழ் வழிபாடு நடைபெறச் செய்தும், தமிழ்க் காப்பு நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்புப்பணியில் ஈடுபடுமாறு தமிழக அரசைத் தூண்டியும், தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றியவர், தமிழ்நாட்டுத் திருமடத் தலைவர் அனைவருள்ளும் தலைசிறந்த தவத்திருக் குன்றக்குடி அடிகள் ஆவர்.

(2) தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை

நீண்ட காலமாகக் கிடைக்காத நூல்கள்நேர்மையான விலைக்குக் கிடைக்கு மாறும், விளங்காதசெய்யுட் பனுவல்கள் எளிதாக விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களின்மூலத்தையும் உரையையும் ஆங்கிலமொழிபெயர்ப்பையும், திண்ணிய வெண்டாளில் முத்துப்போன்ற எழுத்திற் செவ்வையாக அச்சிட்டு,கண்கவர் கவின் கட்டடங் கட்டி, உலக முழுதும் பரப்பித் தமிழ் நூல் வெளியீட்டுத் துறை யில் வாகைசூடியும், இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் ஆழ்ந்து ஈடுபட்டும், ஓய்வு பெற்ற தமிழ்ப் புலவர்க்கு வேலை யளித்தும், சென்னை வாணர்க்குச் சிறப்பாகப் பயன்படும் மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியும், ஆங்காங்கு நூற்காட்சி யமைத்தும், ஆண்டு தோறும் மறைமலையடிகள் விழாக்கொண்டாடியும், தனித்தமிழ்த் தொண்டரை ஊக்கியும், இடைவிடாது தமிழைக் காத்து வருபவர், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை ஆவர்.

(3) பாவலர் பெருஞ்சித்திரனார்

பட்டம் பதவியோ செல்வச் சிறப்போ அமைச்சர் துணையோ சற்றும் இல்லாதிருந்தும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் அரசுகளும் வெட்கித் தலைகுனியவும், அகப்பகையும் புறப்பகையும் அடியோ டொழியவும், தமிழன்பர் தம் தவப்பயனை வியந்து மகிழவும், (சித்தியம் ஆரியம் சேமியம் என்னும்) முப்பெரு மொழிக் குடும்பங்களுக்கும் குமரிநாட்டுக் குலத்தமிழே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்று முரசறைந்து சாற்றவும், மக்களினமுள்ள காலமெல்லாம் முத்தமிழ் அரியணையில் வீற்றிருந்து மொழியுலகம் முழுவதையும் ஒருகுடைக்கீழ் ஆளுமாறும், தமிழன் தலை நிமிர்ந்து ஏறுபோற் பீடுநடை கொள்ளுமாறும், எருதந்துறை ஆங்கிலச் சொற் களஞ்சியத்தையொத்த, பன்னிருமடலச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்கவும் வெளியிடவும், இதுவரைஎவரும் செய்யாத வகையில் 'தென்மொழி'த் திட்டம்வகுத்து, எதிர்காலத் தமிழ் வரலாற்றில் தம்பெயரைப் பொன்னெழுத்திற் பொறிக்குமாறு செய்து கொண்டவர், 'தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார் ஆவர்.

                                                                                                          தொடரும்..........................

Thursday, April 5, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 3

பாகம்-2 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பேந்தா
சதுரப் பேந்தா

ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டுப் பேந்தா எனப் படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்கு நாட்டில் சிறப்பாய் விளையாடப் படுவது பற்றி, திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.

ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள்சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லு மாயின், தெறித்தடிக்கப்படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித் தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தி யெனப்படும்.

ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.

ஆடுமுறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின் மேல் நின்று கொண்டு,  ஒவ்வொருவனாய்க் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும்.பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.

ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்று கொண்டு தன் கோலி யைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று
நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், பேந்தாவிற் குள்ளிருக் குங் கோலி யை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப்பட்ட கோலியன்றி

அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக் குள்ளும் நிற்றல் கூடாது; நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தா விற்கு வெளியில் நிற்பின், "பேந்தா செத்து ஆறு மாசம்" என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறிய போதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.

அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும் போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு.

மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங் கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.

ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, "பேந்தாமேற் கைபடும்" என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், "பேந்தாமேற் கைபடக்கூடாது" என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.

அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் "நேர்" என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.

அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் "சாண்சூடி சடாபுடா" என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். "சாண்சூடி சடாபுடா இல்லை" என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டுவதில்லை.

ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் "தடுத்தால் தூர்" என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.

அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும் போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடி தவறின், மீண்டும் நில மட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.

மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்று தரம் அடித்துவிடின் எதிரி தன் கோலியைத் தன் முட்டிக் கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டு வந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவ னாவன்; அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை முட்டிதள்ளல் என்பர்.



                                                                                                                 தொடரும் ...............

Wednesday, April 4, 2012

நாம் யார் -43

பாகம்-42 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தமிழ் வளர்த்த தனிப்பெரும் முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

1925-ற்கும் 1950-ற்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வரா யிருந்த தமிழர் அனைவருள்ளும், வயிறு வளர்க்காது தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர். கணிதப் பேராசிரியரா யிருந்தும் பெருங் கல்லூரிக்குச் சென்று பெருஞ்சம்பளம் பெறாது சேலத்திலேயே நிலைத்திருந்து, பண்பட்ட தமிழரையே பாடத்துறைத் தலைமையாசிரியராக அமர்த்தியும், பிற கல்லூரிகளில் இடம்பெறாத ஏழை மாணவர்க்கெல்லாம் இடந்தந்தும், திருக்குறட் கழகம் நிறுவிவகுப்பு நடத்தியும், திருக்குறட்கு உரை வரைந்தும்,பெரியார்க்குத் துணை நின்றும், கல்லூரிகளிலும் மன்றங்களிலும் சொற்பொழிவாற்றியும்,சாத்திரியார் கலைச்சொற் குழுவி லிருந்து பணிபுரிந்தும்,   மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் வேண்டிய ஏந்துகளை யெல்லாஞ் செய்து அவரின் மொழி யாராய்ச்சியை முற்றுவித்தும், தம் துணையாசிரியர் சிலரைப் பிற கல்லூரி முதல்வராக்கியும், விருந்தோம்பி வேளாண்மை செய்து இறுதிவரை தமிழ் வாழ்வு வாழ்ந்தும், இறவாப்புகழ் பெற்றவர் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்.

தமிழரை முன்னேற்றிய நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை

இரண்டாந் தரமா யிருந்த சேலம் நகராட்சிக் கல்லூரியை முதற்றரமாக்கியும், ஆரியத்தை யெதிர்த்தும், இராமசாமிக் கவுண்டரையூக்கியும், மறைமலை யடிகளைப் போற்றியும்,தமிழிசை மன்றம் நிறுவியும், தமிழையும் தமிழரையும் முன்னேற்றியவர், சேலம் நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை.

பேராய வீழ்ச்சியும் தி.மு.க.ஆட்சியும்

நாட்டு விடுதலைக் கொள்கை யின்மையால் நயன்மைக் கட்சி தோல்வி யுற்றது. நாட்டு மொழிப் பற்றின்மையால் பேராயக்கட்சி வீழ்ந்தது. திராவிடர் முன்னேற்றக் கழகம் 1967-இல் தமிழ்நாட்டு ஆட்சியைக்கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரையார் சென்னை நாடென் றிருந்ததைத் தமிழ்நாடு என மாற்றினார்; சீர்திருத்தத் திருமணத்தையும் தமிழ்த் திருமணத்தையும் சட்ட முறைப்படி செல்லுபடியாக்கினார்;  கோவை மாணவர் கிளர்ச்சி செய்த பின், சட்டப் பேரவையில் இந்தி விலக்குத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பேராயம் இந்தியை ஏற்றுத் தமிழ்நாட்டிற்குக் கேடு செய்தது. ஆங்கிலேயன் தமிழர்க்கு மீட்பனாகவன்றி அடிமைப் படுத்தியாக வரவில்லை. அவன் வந்த நிலையில், தமிழன் நாயும் கழுதையும் பன்றியும் போல் பிராமணனின் எச்சிலுண்டியைத் தின்று கொண்டிருந்தான். அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப் படுத்தினவன் ஆங்கிலேயனே. அவன் வந்திராவிடின், இந்தியா முழுதும் ஒருபோதும் ஓராட்சிக்குட்பட்டிராது. இரசியா கைப்பற்றியிருப்பின் விடு தலையே பெற்றிருக்க முடியாது. கிழக்கிந்தியக் குழும்பாட்சியில் தான் ஊழலிருந்தது.

இங்கிலாந்தரசு இந்திய ஆட்சியை மேற்கொண்டதிலிருந்து மேன்மேலும் சீர்திருத்தம் நிகழ்ந்து கொண்டேவந்தது. இறுதியில், இந்தியரைத் தம்மாட்சிக்குத் தகுதிப்படுத்திய பின் தானே நீங்குவதற்கிருந்தான் ஆங்கிலேயன். பேராயந்தான் அவனை முந்தித் துரத்தியது. அதனால் இந்தியா அடைந்த பொருளிழப்பும் ஆளிழப்பும் அமைதிக் குலைவும் கொஞ்ச நஞ்சமல்ல. பேராயம் நயன்மைக்கட்சிக்கு மாறாகவே பிராமணரால் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டது. அதைத் தோற்றுவித்த பிராமணர் இவ்வுல கினின்றோ அக் கட்சியினின்றோ நீங்கி விட்டனர். அடிமைத்தனமும் தன்னலமுங் கொண்ட தமிழரே அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக் கின்றனர். பெருநன்மை செய்த ஆங்கிலேயனைப் பெருந்தீங்கு செய்தவனாகக் கூறுவது, கழுவாயில்லா வழுவாயாகும்.இக் குற்றம் பேராயத்திற்சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கோ பன்மடங்கு பெரிதாகும்.

ஆங்கிலவரசு பல்கலைக்கழகக் கல்வி நிலையங்களில் தான், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு இடந்தர முடிந்தது. மேல்வகுப்பார் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளி களிலும், கீழ் வகுப்பாரும் இடம்பெறச் செய்தது நயன்மைக் கட்சி யாட்சியே. அதன்பின்னரே, காந்தியடிகளின் முயற்சி யால்,பேராயமும் நயன்மைக் கட்சியைப் பின்பற்றியது. ஆயினும், குலங்களின் பிறவித் தொடர்பைக் காந்தியடிகள் நீக்க இயலவில்லை.

பேராயத் தமிழத் தலைவர் செய்த நன்மையெல்லாம், மனு தரும முறைப்படி பிள்ளைகள் பெற்றோர் தொழிலை மேற்கொள்ள வேண்டு மென்று ஆச்சாரியார் புகுத்த விருந்த தொடக்கக் கல்வித் திட்டத்தைத் திரு. காமராசர் தடுத்ததும்; திருவையாற்று அரசர் கல்லூரி விடுதியில்,பிராமணன் சமைத்த வுண்டியைப் பிராமண மாணவர்க்குத் தனியிடத்திற் படைத்து வந்த வழக்கத்தை, தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர் நாடிமுத்துப் பிள்ளை நிறுத்தியதுமே. இவை நயன்மைக்கட்சி யாட்சியிலும் நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதே யில்லை.

ஆங்கிலேயர் வந்திராவிடின், ஒரேயொரு வையாபுரி தவிர மற்றெல்லா அமைச்சரும் பிராமணரா யிருந்திருக்கக் கூடிய நிலைமை, இன்றில்லையே என்றெண்ணித்தான், அக் குலத்தார், நயன்மைக்கட்சியையும், அதன் கான் முளையாகிய தி.மு.க.வையும், காட்டிக் கொடுக்கும் கூட்ட வகையார் (Quislingvariety) என்று பழிக்கின்றனர். இத்தகைய குற்றச்சாட்டு, நாட்டு மக்கள் வாயினின்று வரத்தக்கதே யன்றி, நாட்டைக் கெடுக்கும் வந்தேறிகள் வாயினின்று வரத்தக்கதன்று.

தி.மு.க. பொதுவுடைமைக் கொள்கையைப் படிப்படியாகத் தழுவுவதால், பொதுவுடைமைக் கட்சி இனிப் பிரிந்து நிற்க வேண்டுவ தில்லை.

தமிழ்நாடு விடுதலை பெறவில்லை

வெள்ளைக்காரனை விரட்டி விட்டோமென்றும், நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தோமென்றும், பேராயத்தார் நாக்கடிப்பாகவாய்ப் பறை யறைந்து வரினும், ஆங்கிலன் நீங்கிக்கால்நூற்றாண்டான பின்னும், தமிழ்நாடு விடுதலை பெறவில்லை.

சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட நிலைமை, தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்ட தொத்ததே. தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற முறையிலேயே தமிழின்  தாழ்வு சமற்கிருத வுயர்வு என்னும் நிலைமையுள்ளது. தாக்கு வோனைத் தாக்காதுதற்காப்போன் விடுதலை பெற முடியாது. பிராமணர் இக்காலத்தில் தம்மை நிலத்தேவர் என்று சொல்ல முடியாதாகையால், சமற்கிருதம் தேவமொழி யென்று சொல்லித் தம் மேம்பாட்டை நிலைநிறுத்த முயல்கின்றனர். கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலை யடைந்து தன் பழம் பெருமையை மீளப்பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்.

                                                                                                   தொடரும்.........................

Tuesday, April 3, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 2

பாகம்-1 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடர்ந்து விளையாடுவோம்.


கோலி விளையாட்டு

பாண்டிநாட்டு முறை

விளையாட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி =உருண்டை).

விளையாடுவர்களின் எண்ணிக்கை : குறைந்தது இருவரும் அதற்கு மேற்பட்டவரும் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாலடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடுபவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலி யும்,  இதற்குரிய கருவிகளாம். கோலி யாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.

ஆடும் இடம் : அகன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடகர், குழி வரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக் குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத் தொலைவில் கீறப்பட்ட கோட்டில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்த்தன் தன் கோலியை அக் குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.

முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தெறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும், அதன்பின்
அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே
வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்கு முறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் வீழ்த்து நடுக் குழிக்குள் நிகழும்.
அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல்
வேண்டும்.

முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம்
தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.

ஒருவன் ஆடும் போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்த முறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்குமாறும், அதன் அடியினின்று தப்புமாறும்,
அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின்,  எதிரி ஆடல் வேண்டும்.  எதிரியின் கோலி தொலைவிலிருக்கும் போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்த முறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு. 

ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும்.

ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே. பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும்.

ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டு வாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக் கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக் கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும்.

ஆட்டுத் தோற்றம் : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப் பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

ஆட்டின் பயன் : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித் தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம்.



சோழ கொங்குநாட்டு முறை

சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டத்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம் முதலிய பல வகைப்படும்.


                                                                                                      தொடரும்.......................

Monday, April 2, 2012

நாம் யார் -42

பாகம்-41 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்

கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம்சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism),அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர்,பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகையாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மையொப்புக் கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட்டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந்தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போக விருந்த நிலையில்,1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும்,

அறிவியல்,  சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம்,உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும்,ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும்என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங்காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த்திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi bethe Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொது மொழியா யிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறு நூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணையற்றவர்; பல்லவபுரம் பொது நிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள். 

பெரியார் அருஞ்செயல்

நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந் தெரியாது ஓடி ஆங்காங்குப் பதுங்கிக் கொண்டனர்.அன்று பெரியார் ஒருவரே திரவிட-ஆரியப் போர்க்களத்தில் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாது போராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து கற்றோர்க்குந் தன்மான வுணர்ச்சி யூட்டி,பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணா தடித்து வீழ்த்தி, ஆச்சாரியார் புகுத்திய இந்தியை எதிர்த்துச் சிறைத் துன்பத்திற் காளாகி, கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத் தும், பகுத்தறி வியக்கத்தைத் தோற்றுவித்தும், மூடப் பழக்கவழக்கங் களையொழித்தும்  பெரியார்.

திரு.வி.கலியாணசுந்தர முதலியார் பொதுநலத் தொண்டு

பெண்ணின் பெருமை, தொழிலாளர் உரிமை, சமயப் பொது நோக்கு, காதற் சிறப்பு முதலிய உண்மைகளையும் உரிமைகளையும் பண்புகளையும் நாட்டி, பல தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தவர் திரு.வி.க.

இரு தமிழ்ப் போராடியர்

உலக மொழிகளுள் ஒலிப்பு முயற்சி குன்றியது தமிழே யென்றும், அதன் நெடுங்கணக்கு முழு நிறைவானதென்றும், மேலை யாரிய மொழிகளும் தமிழினின்று கடன் கொண்டுள்ளன வென்றும், நாடுமுழுதும் மேடையேறிப் பறைசாற்றிய பா.வே.மாணிக்கநாயகரும் ; தமிழ்ப் பற்று, ஆரியத்தினின்று விடுதலை, தமிழ் வாழ்வு, குடும்ப நலம், கண்மூடிச் சடங்கொழிப்பு முதலியன பற்றி, எளிய இனிய மறப்பாடல்கள் ஏராளமாகப் பாடி நாட்டைத் திருத்திய புரட்சிப் பாவலர் பாரதிதாசனும் இருதமிழ்ப் போராடிய ராவர்.

இந்தி யெதிர்ப்புத் தலைவர் இருவர்


மறைமலையடி களும் பெரியாரும் தத்தம் நிலையில் நின்று இந்திக் கட்டாயத்தை எதிர்த்துநிற்க, இயன்றபோதெல்லாம் நாடு முழுதும் பொதுக் கூட்டங்களும் மாநாடுகளும் கூட்டி, இடை விடாது இந்தியை வன்மையா யெதிர்த்த தறுகட்படைத் தலைவர் இருவர், பேரா. சோமசுந்தர பாரதியாரும் தமிழகப் புலவர் குழு அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதமும் ஆவர்.

புலவர் பொறை குறைத்த பேராசிரியர்

ஆரியச் சூழ்ச்சியால், தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த சமற்கிருதப் பகுதியைப் பெருமுயற்சி செய்துநீக்கியவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்.

பல்துறைத் தமிழ்த் தொண்டர்

தாமோதரம் பிள்ளை, பர்.உ.வே.சாமிநாதையர், பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத்தேவர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ச. பவானந்தம் பிள்ளை, த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பன்னீர்ச்செல்வம், கா. சுப்பிரமணியப் பிள்ளை, மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வ.திருவரங்கம் பிள்ளை, அண்ணாமலை யரசர், பண்டிதமணி கதிரேசச்செட்டியார், க.ப.மகிழ்நன் (சந்தோஷம்), துடிசை கிழார் அ.சிதம்பரனார், அம்பத்தூர்த் தலைமை யாசிரியர் (M.)சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்பேரறிஞர், தத்தம் துறையில் தத்தமக் கியன்றவாறு தமிழ்த் தொண்டு செய்தவராவர்.

வரலாற்று நூல் தொண்டர் மூவர்

சேசையங்கார், (P.T.) சீநிவாச ஐயங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவரும், தம் வரலாற்று நூலால் தமிழின் பெருமையைக் காத்தவராவர்.

கணியர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, தலைமையாசிரியர் சாமி வேலாயுதம் பிள்ளையொடு கூடிக் கலைச் சொற்கள் ஆக்குவித்தும்,பின்னர் ஆட்சிச் சொல் அகரவரிசை தொகுப்பித்தும், தமிழாட்சி நடைபெறத்தக்க தொண்டு செய்தவராவர்.

இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அவர் மகனார் வரகுண பாண்டியன், மதுரைப் பொன்னுச்சாமிப் பிள்ளை முதலியோர், இசைத் தமிழாராய்ச்சியால் தமிழிசையின் பெருமையையும் முதன்மையையும் நாட்டியவராவர்.

நடிப்புத்துறைத் தொண்டர்

இன்னிசை நடிகர் தியாகராசப் பாடகரும் நகைச்சுவை நடிகர் (N.S.) கிருட்டிணனும், நடிப்புத் துறையில் தமிழன் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்தவராவர்.

                                                                                                         தொடரும்.....................

Sunday, April 1, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 1

நமது விளையாட்டுகளை பற்றி தேரிந்து கொள்வோம் .தமிழர்களின்  விளையாட்டு பகுதிக்கு பகுதி வேறுபட்டுள்ளது இதை விரிவாக பார்ப்போம் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. கோலி
  2. தெல்
  3. சில்லாங் குச்சி 
  4. பந்து 
  5. மரக்குரங்கு
  6. காயா பழமா 
  7. பஞ்சு வெட்டுங் கம்படோ 
  8. குச்சு விளையாட்டு 
  9. பம்பரம் 
  10. பட்டம் 
இரவு விளையாட்டு 
  1. குதிரைக்குக் காணங் கட்டல்
  2. வண்ணான் தாழி 
  3. சூ விளையாட்டு 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. கிளித் தட்டு 
  2. பாரிக்கோடு 
  3. அணிற்பிள்ளை
  4. சடுகுடு 
  5. கால்தூக்குற கணக்கப்பிள்ளை 
  6. பூக் குதிரை 
  7. பச்சைக் குதிரை 
  8. குதிரைச்சில்லி 
பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. தட்டாங்கள்
  2. கிச்சுக் கிச்சுத் தம்பலம் 
  3. குறிஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. பாக்கு வெட்டியைக் காணோமே 
  2. நிலாக் குப்பல் 
  3. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. ஒருகுடம் தண்ணீர் ஊற்றி 
  2. என் உலக்கை குத்துக்குத்து 
  3. ஊதாமணி 
  4. பூப்பறிக்க வருகிறோம் 
  5. தண்ணீர் சேந்துகிறது
ஆண்கள் பெண்களுக்கும் சேர்ந்த விளையாட்டு 

பகல் விளையாட்டு 
  1. பண்ணாங்குழி
  2. பாண்டி 
  3. கம்ப விளையாட்டு 
  4. கச்சக்காய்ச் சில்லி
  5. குஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. கண்ணாம் பொத்தி 
  2. புகையிலைக் கட்டையுருட்டல் 
  3. புகையிலைக் கட்டைஎடுத்தல் 
  4. பூச்சி 
  5. அரசனுத் தோட்டமும் 
  6. குலை குலையாய் முந்திரிக்காய் 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. நொண்டி
  2. நின்றால் பிடித்துக்கொள்
  3. பருப்புச்சட்டி 
  4. மோதிரம் வைத்தல் 
  5. புலியும் ஆடும் 
  6. இதென்ன மூட்டை 
  7. கும்மி 
குழந்தைகள் விளையாட்டுகள்  
  1. சோறு கொண்டுபோகிற வழியிலே 
  2. அட்டலங்காய் புட்டலங்காய்
பெரியோர் விளையாட்டுகள் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம்

இரவு  விளையாட்டு -கழியல் 

பகல் -இரவு விளையாட்டுகள்  - முக்குழியாட்டம் 

பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம் , பண்ணாங்குழி

பகல் -இரவு விளையாட்டுகள்  - கும்மி 

                                                                                                            தொடரும்............................