Wednesday, April 4, 2012

நாம் யார் -43

பாகம்-42 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தமிழ் வளர்த்த தனிப்பெரும் முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

1925-ற்கும் 1950-ற்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வரா யிருந்த தமிழர் அனைவருள்ளும், வயிறு வளர்க்காது தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர். கணிதப் பேராசிரியரா யிருந்தும் பெருங் கல்லூரிக்குச் சென்று பெருஞ்சம்பளம் பெறாது சேலத்திலேயே நிலைத்திருந்து, பண்பட்ட தமிழரையே பாடத்துறைத் தலைமையாசிரியராக அமர்த்தியும், பிற கல்லூரிகளில் இடம்பெறாத ஏழை மாணவர்க்கெல்லாம் இடந்தந்தும், திருக்குறட் கழகம் நிறுவிவகுப்பு நடத்தியும், திருக்குறட்கு உரை வரைந்தும்,பெரியார்க்குத் துணை நின்றும், கல்லூரிகளிலும் மன்றங்களிலும் சொற்பொழிவாற்றியும்,சாத்திரியார் கலைச்சொற் குழுவி லிருந்து பணிபுரிந்தும்,   மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் வேண்டிய ஏந்துகளை யெல்லாஞ் செய்து அவரின் மொழி யாராய்ச்சியை முற்றுவித்தும், தம் துணையாசிரியர் சிலரைப் பிற கல்லூரி முதல்வராக்கியும், விருந்தோம்பி வேளாண்மை செய்து இறுதிவரை தமிழ் வாழ்வு வாழ்ந்தும், இறவாப்புகழ் பெற்றவர் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்.

தமிழரை முன்னேற்றிய நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை

இரண்டாந் தரமா யிருந்த சேலம் நகராட்சிக் கல்லூரியை முதற்றரமாக்கியும், ஆரியத்தை யெதிர்த்தும், இராமசாமிக் கவுண்டரையூக்கியும், மறைமலை யடிகளைப் போற்றியும்,தமிழிசை மன்றம் நிறுவியும், தமிழையும் தமிழரையும் முன்னேற்றியவர், சேலம் நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை.

பேராய வீழ்ச்சியும் தி.மு.க.ஆட்சியும்

நாட்டு விடுதலைக் கொள்கை யின்மையால் நயன்மைக் கட்சி தோல்வி யுற்றது. நாட்டு மொழிப் பற்றின்மையால் பேராயக்கட்சி வீழ்ந்தது. திராவிடர் முன்னேற்றக் கழகம் 1967-இல் தமிழ்நாட்டு ஆட்சியைக்கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரையார் சென்னை நாடென் றிருந்ததைத் தமிழ்நாடு என மாற்றினார்; சீர்திருத்தத் திருமணத்தையும் தமிழ்த் திருமணத்தையும் சட்ட முறைப்படி செல்லுபடியாக்கினார்;  கோவை மாணவர் கிளர்ச்சி செய்த பின், சட்டப் பேரவையில் இந்தி விலக்குத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பேராயம் இந்தியை ஏற்றுத் தமிழ்நாட்டிற்குக் கேடு செய்தது. ஆங்கிலேயன் தமிழர்க்கு மீட்பனாகவன்றி அடிமைப் படுத்தியாக வரவில்லை. அவன் வந்த நிலையில், தமிழன் நாயும் கழுதையும் பன்றியும் போல் பிராமணனின் எச்சிலுண்டியைத் தின்று கொண்டிருந்தான். அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப் படுத்தினவன் ஆங்கிலேயனே. அவன் வந்திராவிடின், இந்தியா முழுதும் ஒருபோதும் ஓராட்சிக்குட்பட்டிராது. இரசியா கைப்பற்றியிருப்பின் விடு தலையே பெற்றிருக்க முடியாது. கிழக்கிந்தியக் குழும்பாட்சியில் தான் ஊழலிருந்தது.

இங்கிலாந்தரசு இந்திய ஆட்சியை மேற்கொண்டதிலிருந்து மேன்மேலும் சீர்திருத்தம் நிகழ்ந்து கொண்டேவந்தது. இறுதியில், இந்தியரைத் தம்மாட்சிக்குத் தகுதிப்படுத்திய பின் தானே நீங்குவதற்கிருந்தான் ஆங்கிலேயன். பேராயந்தான் அவனை முந்தித் துரத்தியது. அதனால் இந்தியா அடைந்த பொருளிழப்பும் ஆளிழப்பும் அமைதிக் குலைவும் கொஞ்ச நஞ்சமல்ல. பேராயம் நயன்மைக்கட்சிக்கு மாறாகவே பிராமணரால் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டது. அதைத் தோற்றுவித்த பிராமணர் இவ்வுல கினின்றோ அக் கட்சியினின்றோ நீங்கி விட்டனர். அடிமைத்தனமும் தன்னலமுங் கொண்ட தமிழரே அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக் கின்றனர். பெருநன்மை செய்த ஆங்கிலேயனைப் பெருந்தீங்கு செய்தவனாகக் கூறுவது, கழுவாயில்லா வழுவாயாகும்.இக் குற்றம் பேராயத்திற்சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கோ பன்மடங்கு பெரிதாகும்.

ஆங்கிலவரசு பல்கலைக்கழகக் கல்வி நிலையங்களில் தான், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு இடந்தர முடிந்தது. மேல்வகுப்பார் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளி களிலும், கீழ் வகுப்பாரும் இடம்பெறச் செய்தது நயன்மைக் கட்சி யாட்சியே. அதன்பின்னரே, காந்தியடிகளின் முயற்சி யால்,பேராயமும் நயன்மைக் கட்சியைப் பின்பற்றியது. ஆயினும், குலங்களின் பிறவித் தொடர்பைக் காந்தியடிகள் நீக்க இயலவில்லை.

பேராயத் தமிழத் தலைவர் செய்த நன்மையெல்லாம், மனு தரும முறைப்படி பிள்ளைகள் பெற்றோர் தொழிலை மேற்கொள்ள வேண்டு மென்று ஆச்சாரியார் புகுத்த விருந்த தொடக்கக் கல்வித் திட்டத்தைத் திரு. காமராசர் தடுத்ததும்; திருவையாற்று அரசர் கல்லூரி விடுதியில்,பிராமணன் சமைத்த வுண்டியைப் பிராமண மாணவர்க்குத் தனியிடத்திற் படைத்து வந்த வழக்கத்தை, தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர் நாடிமுத்துப் பிள்ளை நிறுத்தியதுமே. இவை நயன்மைக்கட்சி யாட்சியிலும் நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதே யில்லை.

ஆங்கிலேயர் வந்திராவிடின், ஒரேயொரு வையாபுரி தவிர மற்றெல்லா அமைச்சரும் பிராமணரா யிருந்திருக்கக் கூடிய நிலைமை, இன்றில்லையே என்றெண்ணித்தான், அக் குலத்தார், நயன்மைக்கட்சியையும், அதன் கான் முளையாகிய தி.மு.க.வையும், காட்டிக் கொடுக்கும் கூட்ட வகையார் (Quislingvariety) என்று பழிக்கின்றனர். இத்தகைய குற்றச்சாட்டு, நாட்டு மக்கள் வாயினின்று வரத்தக்கதே யன்றி, நாட்டைக் கெடுக்கும் வந்தேறிகள் வாயினின்று வரத்தக்கதன்று.

தி.மு.க. பொதுவுடைமைக் கொள்கையைப் படிப்படியாகத் தழுவுவதால், பொதுவுடைமைக் கட்சி இனிப் பிரிந்து நிற்க வேண்டுவ தில்லை.

தமிழ்நாடு விடுதலை பெறவில்லை

வெள்ளைக்காரனை விரட்டி விட்டோமென்றும், நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தோமென்றும், பேராயத்தார் நாக்கடிப்பாகவாய்ப் பறை யறைந்து வரினும், ஆங்கிலன் நீங்கிக்கால்நூற்றாண்டான பின்னும், தமிழ்நாடு விடுதலை பெறவில்லை.

சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட நிலைமை, தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்ட தொத்ததே. தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற முறையிலேயே தமிழின்  தாழ்வு சமற்கிருத வுயர்வு என்னும் நிலைமையுள்ளது. தாக்கு வோனைத் தாக்காதுதற்காப்போன் விடுதலை பெற முடியாது. பிராமணர் இக்காலத்தில் தம்மை நிலத்தேவர் என்று சொல்ல முடியாதாகையால், சமற்கிருதம் தேவமொழி யென்று சொல்லித் தம் மேம்பாட்டை நிலைநிறுத்த முயல்கின்றனர். கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலை யடைந்து தன் பழம் பெருமையை மீளப்பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்.

                                                                                                   தொடரும்.........................

No comments:

Post a Comment