Tuesday, April 17, 2012

விளையாடுவோம் வாருங்கள் -11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பிள்ளையார் பந்து 

விளையாட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின் மேற் பந்தை எறிந்தாடும் விளையாட்டுப் பிள்ளையார் பந்து. இது திருச்சிராப்பள்ளி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டு என சொல்லப்படுகிறது. 

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பொதுவாக, பலர் இதை ஆடுவர். 

விளையாட்டு பொருள் : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும், ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம். 

விளையாடும் இடம்: சுவரடியும் அதையடுத்த வெளிநிலமும் இதை ஆடுமிடமாம். 

விளையாடும் முறை: ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு அணியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப்
பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று 

ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிசையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்கா விடினும், எறியுங் கட்சியார் ஆள்மாறிக் கொண்டேயிருந்து அனைவருந் தீர்ந்த பின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.

பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப் படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில்
இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாரனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது
வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக்கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி
நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர். 

எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்ப வனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்துவிடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். 

அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.

விளையாட்டின் தோற்றம்   : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் கொள்ளையடித்தற் பொருட்டும்,  இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரகங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கை யாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத்தக்கன.

                                                                                                           தொடரும்......................

No comments:

Post a Comment