Monday, April 2, 2012

நாம் யார் -42

பாகம்-41 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்

கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம்சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism),அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர்,பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகையாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மையொப்புக் கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட்டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந்தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போக விருந்த நிலையில்,1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும்,

அறிவியல்,  சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம்,உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும்,ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும்என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங்காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த்திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi bethe Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொது மொழியா யிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறு நூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணையற்றவர்; பல்லவபுரம் பொது நிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள். 

பெரியார் அருஞ்செயல்

நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந் தெரியாது ஓடி ஆங்காங்குப் பதுங்கிக் கொண்டனர்.அன்று பெரியார் ஒருவரே திரவிட-ஆரியப் போர்க்களத்தில் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாது போராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து கற்றோர்க்குந் தன்மான வுணர்ச்சி யூட்டி,பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணா தடித்து வீழ்த்தி, ஆச்சாரியார் புகுத்திய இந்தியை எதிர்த்துச் சிறைத் துன்பத்திற் காளாகி, கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத் தும், பகுத்தறி வியக்கத்தைத் தோற்றுவித்தும், மூடப் பழக்கவழக்கங் களையொழித்தும்  பெரியார்.

திரு.வி.கலியாணசுந்தர முதலியார் பொதுநலத் தொண்டு

பெண்ணின் பெருமை, தொழிலாளர் உரிமை, சமயப் பொது நோக்கு, காதற் சிறப்பு முதலிய உண்மைகளையும் உரிமைகளையும் பண்புகளையும் நாட்டி, பல தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தவர் திரு.வி.க.

இரு தமிழ்ப் போராடியர்

உலக மொழிகளுள் ஒலிப்பு முயற்சி குன்றியது தமிழே யென்றும், அதன் நெடுங்கணக்கு முழு நிறைவானதென்றும், மேலை யாரிய மொழிகளும் தமிழினின்று கடன் கொண்டுள்ளன வென்றும், நாடுமுழுதும் மேடையேறிப் பறைசாற்றிய பா.வே.மாணிக்கநாயகரும் ; தமிழ்ப் பற்று, ஆரியத்தினின்று விடுதலை, தமிழ் வாழ்வு, குடும்ப நலம், கண்மூடிச் சடங்கொழிப்பு முதலியன பற்றி, எளிய இனிய மறப்பாடல்கள் ஏராளமாகப் பாடி நாட்டைத் திருத்திய புரட்சிப் பாவலர் பாரதிதாசனும் இருதமிழ்ப் போராடிய ராவர்.

இந்தி யெதிர்ப்புத் தலைவர் இருவர்


மறைமலையடி களும் பெரியாரும் தத்தம் நிலையில் நின்று இந்திக் கட்டாயத்தை எதிர்த்துநிற்க, இயன்றபோதெல்லாம் நாடு முழுதும் பொதுக் கூட்டங்களும் மாநாடுகளும் கூட்டி, இடை விடாது இந்தியை வன்மையா யெதிர்த்த தறுகட்படைத் தலைவர் இருவர், பேரா. சோமசுந்தர பாரதியாரும் தமிழகப் புலவர் குழு அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதமும் ஆவர்.

புலவர் பொறை குறைத்த பேராசிரியர்

ஆரியச் சூழ்ச்சியால், தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த சமற்கிருதப் பகுதியைப் பெருமுயற்சி செய்துநீக்கியவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்.

பல்துறைத் தமிழ்த் தொண்டர்

தாமோதரம் பிள்ளை, பர்.உ.வே.சாமிநாதையர், பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத்தேவர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ச. பவானந்தம் பிள்ளை, த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பன்னீர்ச்செல்வம், கா. சுப்பிரமணியப் பிள்ளை, மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வ.திருவரங்கம் பிள்ளை, அண்ணாமலை யரசர், பண்டிதமணி கதிரேசச்செட்டியார், க.ப.மகிழ்நன் (சந்தோஷம்), துடிசை கிழார் அ.சிதம்பரனார், அம்பத்தூர்த் தலைமை யாசிரியர் (M.)சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்பேரறிஞர், தத்தம் துறையில் தத்தமக் கியன்றவாறு தமிழ்த் தொண்டு செய்தவராவர்.

வரலாற்று நூல் தொண்டர் மூவர்

சேசையங்கார், (P.T.) சீநிவாச ஐயங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவரும், தம் வரலாற்று நூலால் தமிழின் பெருமையைக் காத்தவராவர்.

கணியர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, தலைமையாசிரியர் சாமி வேலாயுதம் பிள்ளையொடு கூடிக் கலைச் சொற்கள் ஆக்குவித்தும்,பின்னர் ஆட்சிச் சொல் அகரவரிசை தொகுப்பித்தும், தமிழாட்சி நடைபெறத்தக்க தொண்டு செய்தவராவர்.

இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அவர் மகனார் வரகுண பாண்டியன், மதுரைப் பொன்னுச்சாமிப் பிள்ளை முதலியோர், இசைத் தமிழாராய்ச்சியால் தமிழிசையின் பெருமையையும் முதன்மையையும் நாட்டியவராவர்.

நடிப்புத்துறைத் தொண்டர்

இன்னிசை நடிகர் தியாகராசப் பாடகரும் நகைச்சுவை நடிகர் (N.S.) கிருட்டிணனும், நடிப்புத் துறையில் தமிழன் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்தவராவர்.

                                                                                                         தொடரும்.....................

No comments:

Post a Comment