Sunday, April 8, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.
வட்டப்பேந்தா

 விளையாட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக் கோட்டிற்குள் உருட்டி யாடுங் கோலியாட்டு வகை வட்டப் பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.

ஆடுவார் எண்ணிக்கை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின் மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.

ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொரு வனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவாவது இருத்தல் வேண்டும்.

ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுவில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும்.

கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில்,  உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

ஆடிடம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை
நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். 

கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்து விட்டால்,  எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.

ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்ட பின், முந்தி யாடு கிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்துவிடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லா வற்றை யும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; 

அடிப்பின்,  பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். 

உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன்.

அதனால் அடுத்தவன் ஆட நேரும்.மூடி பொதுவாக முதலிற் போடப்படுவ தில்லை. பலமுறை சொல்லியுங் கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப் பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.

உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.

முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்டத்தி னின்று வெளியேறிவிடல் வேண்டும்.
அங்ஙனம் வெளியேறி விடின் அது ஒரு வெற்றியாம். குழியிற் போட்டாலும் காயடித் தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய்
கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்து விடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விரு காய் கொடுத்துவிடல் வேண்டும்.முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக் காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும்
திரும்பியாடுவான்.

குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல் போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தை விட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம்
கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். 

குழியிற் போட்ட விடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்து விட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். 

அவன் கெலித்துவிடின், அப் பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக் கிறவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள்
பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும் வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டே யிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.

ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.

எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதி யாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்ட வெல்லாம் கெலிப்புக் காயாகும்.

ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.

                                                                                                                    தொடரும்...............

No comments:

Post a Comment