Sunday, April 15, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

சோழ-கொங்குநாட்டு முறை

கில்லித்தாண்டு

பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு நாட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றுதான் . ஆயினும், இடவேறுபாடு காரணமாக, இரண்டு இடத்து ஆட்டிற்கும் பின்வருமாறு 

சில வேற்றுமைகள் உள்ளன

(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் அழைக்கப் படுகிறது.

பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் இணையானது.

'எடுத்து ஊற்றுதல்' என்னும் பாண்டிநாட்டுக் குறியீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு 'கஞ்சிவார்த்தல்' என்பதாகும்.

(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு பக்கத்தில் மட்டுங் கூராயிருக்கும். ஆனால் கில்லி இருபக்கமும் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.

(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரேனும் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்த பின் இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்த பின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒரு புடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை 'இந்தியக் கிரிக்கட்டு' என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.

பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அது கொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந்
தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல் வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ,  தாண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவி கொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க் கட்சியாரைக் 'கத்திக் காவடி' யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப் பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து,

எதிர்க்கட்சியார் 'கத்திக் காவடி கவானக் காவடி' என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே 'கத்திக் காவடி யெடுத்தல்' என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர்.அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனை யெனப்படும்.

முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்த பின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க
வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்க்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத் தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக் காவடித்
தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.

கிட்டிப்புள்

கிட்டிப்புள் என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :

பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.

முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப் போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப் புள்ளிலோ, குச்சுக் குழியின்
குறுக்கே வைத்து அதற்கு நட்டுக் குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப் பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை
எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே
அதை அடித்தல்வேண்டும். அசைவுநின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந் தவன் அடிக்கவேண்டியிருக்கும். இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும்.

குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.

பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இவ் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆட்டு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் கொட்டிப்புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.

                                                                                                             தொடரும் ...........................

1 comment:

  1. வணக்கம்
    பாரம்பரியம் மிளிர்கின்றது உங்கள் பதிவில்
    ஆனால் நாம் அடையாளங்களை அல்லவா இழந்து கொண்டு இருக்கின்றோம்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete