Saturday, April 7, 2012

நாம் யார் -44

பாகம்-43 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இன்று பிராமணியத்தை நடத்தி வருபவர் தமிழரே

பண்டை நாளில், பிராமணர் தம் வெண்ணிறத்தாலும் வேதமந்திர வெடிப்பொலி யாலும் வேறு வழியாலும் மூவேந்தரையும் வயப்படுத்தி, அவர் வாயிலாகத் தம் கொள்கையைப் பொதுமக்களிடம் வலிந்து புகுத்தினர். இக்காலத்தில், சில கட்சித் தலைவரையும் சில செல்வரையும் துணைக்கொண்டு, தம் கருமத்தை முடிக்கப் பார்க்கின்றனர்.

ஆயினும், அவருள்ளும் ஒள்ளிய மனமும் தெள்ளிய அறிவு முடையார் உளர். தமிழரெல்லாரும் நல்லவரல்லர்; பிராமண ரெல்லாரும் தீயவரல்லர். திருவதங் கோட்டில் (Travancore) தீண்டாதார்க்கு முதன் முதல் திருக்கோவில்களைத் திறந்து விட்டவர் (C.P.) இராமசாமி ஐயரே. வரலாற்று நூல் தமிழ்த் தொண்டருள் தலை சிறந்த மூவர் பிராமணரே.

சின்னஞ்சிறு தொகையினரும் போர் மறமும் வல்லுடம்பும் இல்லாத வருமான பிராமணர், காட்டிக் கொடுக்கும் போலித் தமிழருதவியின்றித் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாக எதுவுஞ் செய்ய முடியாது.

முத்தமிழ்க் காவலர்

(1) தவத்திருக் குன்றக்குடி யடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், கட்டாய இந்திக் கல்வியைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுதும் இடைவிடாது அல்லும் பகலும் இனிய தமிழிற் சொற்பொழிவாற்றியும், ஆண்டுதோறும் பறம்புமலையிற் பாரிவிழா நடாத்திப் பாரி புகழைப் பரப்பிப் பல் புலவர்க்குச் சிறப்புச்செய்தும், திருக் கோவில் களில் தமிழ் வழிபாடு நடைபெறச் செய்தும், தமிழ்க் காப்பு நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்புப்பணியில் ஈடுபடுமாறு தமிழக அரசைத் தூண்டியும், தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றியவர், தமிழ்நாட்டுத் திருமடத் தலைவர் அனைவருள்ளும் தலைசிறந்த தவத்திருக் குன்றக்குடி அடிகள் ஆவர்.

(2) தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை

நீண்ட காலமாகக் கிடைக்காத நூல்கள்நேர்மையான விலைக்குக் கிடைக்கு மாறும், விளங்காதசெய்யுட் பனுவல்கள் எளிதாக விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களின்மூலத்தையும் உரையையும் ஆங்கிலமொழிபெயர்ப்பையும், திண்ணிய வெண்டாளில் முத்துப்போன்ற எழுத்திற் செவ்வையாக அச்சிட்டு,கண்கவர் கவின் கட்டடங் கட்டி, உலக முழுதும் பரப்பித் தமிழ் நூல் வெளியீட்டுத் துறை யில் வாகைசூடியும், இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் ஆழ்ந்து ஈடுபட்டும், ஓய்வு பெற்ற தமிழ்ப் புலவர்க்கு வேலை யளித்தும், சென்னை வாணர்க்குச் சிறப்பாகப் பயன்படும் மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியும், ஆங்காங்கு நூற்காட்சி யமைத்தும், ஆண்டு தோறும் மறைமலையடிகள் விழாக்கொண்டாடியும், தனித்தமிழ்த் தொண்டரை ஊக்கியும், இடைவிடாது தமிழைக் காத்து வருபவர், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை ஆவர்.

(3) பாவலர் பெருஞ்சித்திரனார்

பட்டம் பதவியோ செல்வச் சிறப்போ அமைச்சர் துணையோ சற்றும் இல்லாதிருந்தும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் அரசுகளும் வெட்கித் தலைகுனியவும், அகப்பகையும் புறப்பகையும் அடியோ டொழியவும், தமிழன்பர் தம் தவப்பயனை வியந்து மகிழவும், (சித்தியம் ஆரியம் சேமியம் என்னும்) முப்பெரு மொழிக் குடும்பங்களுக்கும் குமரிநாட்டுக் குலத்தமிழே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்று முரசறைந்து சாற்றவும், மக்களினமுள்ள காலமெல்லாம் முத்தமிழ் அரியணையில் வீற்றிருந்து மொழியுலகம் முழுவதையும் ஒருகுடைக்கீழ் ஆளுமாறும், தமிழன் தலை நிமிர்ந்து ஏறுபோற் பீடுநடை கொள்ளுமாறும், எருதந்துறை ஆங்கிலச் சொற் களஞ்சியத்தையொத்த, பன்னிருமடலச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்கவும் வெளியிடவும், இதுவரைஎவரும் செய்யாத வகையில் 'தென்மொழி'த் திட்டம்வகுத்து, எதிர்காலத் தமிழ் வரலாற்றில் தம்பெயரைப் பொன்னெழுத்திற் பொறிக்குமாறு செய்து கொண்டவர், 'தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார் ஆவர்.

                                                                                                          தொடரும்..........................

No comments:

Post a Comment