பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.
பாண்டிநாட்டு முறை
விளையாட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப் பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும்.
விளையாடுவர்களின் எண்ணிக்கை : இவ் விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சமதொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
விளையாட்டு பொருள் : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுனியில் கூர்மையும் உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இரு முழம் வரை (அவரவர் கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக் கம்பு என்பர்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமை யாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன் தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.
குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர்நுனியிற் கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப் பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.
விளையாடும் இடம் : அரைப் படைச்சால் (? furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டம் ஆடப்படும்.
விளையாடும் முறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன் பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாக வாவது, தம் குச்சை வைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர்.யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்த தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தி யாடல் வேண்டும்.
விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பி யடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன்
அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்க வேண்டும். யார் அடிப்பினும் குச்சை யடித்துப் போக்கிய பின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே
கிடத்தி நிற்பன்.
இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்து விடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியா விடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற் படும்படி யெறியவேண்டும்.
கோலிற் பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டு விடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடாவிடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறி தலுக்கு எடுத்தூற்றுதல் என்று குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடி கொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம்.
பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவில் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும்.
அடிக்குங் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங் குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு உத்தியாள் என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவது முண்டு.எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர்.
தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாக வோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும்வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது. ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய,
அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும்.
விளையாட்டின்த் தோற்றம் : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயினும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடி கொண்டே யெறிந்து கொல்வது வழக்கம். இவ் வழக்கத்தினின்றே "கோழி யடிக்கக் குறுந்தடி வேண்டுமா?" என்னும் பழமொழியும் எழுந்துளது.
அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற் போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான்.
வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.
இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ் வுயிரி களைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற் போய் விழுவது, அடிபட்ட வுயிரிகள் தொலைவிற்போய் விழுவது போன்றது. குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன்
எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.
விளையாட்டின் பயன் : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில்
விழுமுன்னும், தாழப் பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்கு முன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒரு கருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்தில் எறிவதும்; ஒரு குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இதன் பயனாம்.
தொடரும்..................
No comments:
Post a Comment