Wednesday, April 11, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 6

பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

இருகுழியாட்டம் (இஷ்டம்)

விளையாட்டின் பெயர்  : சுவரடி அரங்கிற்குள் இரு குழி வைத்தாடும் கோலியாட்டு வகை இருகுழியாட்டம் எனப்படும். இதற்கு இட்டம் (இஷ்டம்) அல்லது கிசேபி என்றும் பெயர். இவ் விளையாட்டு பெரும்பாலும் திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஆடப்பெறுவதாகும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் அல்லது (இருவர்க்கு மேற்பட்ட) பலர் இதை ஆடுவர். ஓர் ஆட்டையில் இருவரே இதை ஆட முடியுமாதலால், பலர் ஆடுவதாயின் இவ்விருவராகவே ஆடக்கூடும்.

விளையாட்டு பொருள்  : சுவரடி (அல்லது மேட்டடி) நிலத்தில், ஏறத்தாழ 3 அடி நீளமும் 2 அடி அகலமுமுள்ள ஒரு நீள் சதுர அரங்கமையுமாறு ஓர் அகன்ற பகரக்கோடு கீறிக் கொள்ளல் வேண்டும். அவ் வரங்கின் நெடும் பக்கங்களுள் ஒன்று சுவரடியாயிருக்கும் வண்ணம், பகரத்தின் இரு பக்கக் கோட்டு முனைகளும் சுவரைத் தொடுதல் வேண்டும். அவ் வரங்கிற்கும் இடவலமாக இரு குழிகள் கில்லல் வேண்டும்.

அரங்கிற்கு ஏறத்தாழ முக்கசத் தொலைவில் ஓரடி நீளம் உத்தி கீறப்படும். அதற்கு டாப்பு (Top) என்னும் மூடி இடப்படும்.

ஒருவன் ஆடும்போது இன்னொருவனுக்குக் கோலி தேவையாயிராமையின், ஆடகர் எல்லார்க்கும் பொதுவாக முக்கோலி யிருந்தால் போதும். அவற்றுள்,
இரண்டு உருட்டுவன; ஒன்று அவற்றை அடிப்பது. அடிக்குங் கோலி சற்றுப் பெரிதாகவிருக்கும். அதற்குத் திருச்சிராப்பள்ளிப் பாங்கரில் குட்டு அல்லது
தெல் என்று பெயர்.

விளையாடும் இடம்   : சுவரடி நிலமும் மேட்டடி நிலமும் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : தோற்றவன் கெலித்தவனுக்கு இவ்வளவு காசு கொடுத்தல் வேண்டுமென்று முன்னதாக முடிவு செய்து கொண்டு, உடன் பாட்டின் படியோ திருவுளச் சீட்டின் படியோ யாரேனும் ஒருவன் முந்தியாடுவன். ஆடுவார் எல்லார்க்கும் கோலி பொதுவாயின், கோலிக்குச் சொந்தக்காரன் முந்தியாடுவது வழக்கம்.

ஆடுகிறவன் உத்தியில் நின்றுகொண்டு, முதலாவது இரு சிறு கோலி களையும் அரங்கிற்குள் உருட்டி, அவற்றுள் எதை அடிக்க வேண்டு மென்று எதிரியைக் கேட்பான். அவ் இரண்டினுள் ஆடுகிறவனுக்குக் கிட்ட இருப்பதை அடிக்க வேண்டு மென்று விரும்பின் "கீழ்" என்றும், சற்று எட்ட (அதாவது தொலைவில்) இருப்பதை அடிக்க வேண்டுமென்று விரும்பின் "மேல்" என்றும், 

எதிரி சொல்வான். "கீழ்" என்பதிற்குப் பதிலாக "எதிர்" என்றும் சொல்வதுண்டு. 
ஆடுகிறவன் எதிரி சொன்ன கோலியை அடித்துவிட்டால் கெலித்தவனாவன்.

அவனுக்குப் பேசினபடி எதிரி காசைக் கொடுத்துவிடல் வேண்டும். முதலில்
எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்குமேல் இடையிட்டிருப் பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின்,
எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.

இடையீடு இருவிரற் குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், பச்சா என்னுங் குற்றமாம். அதோடு, 

அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், இரட்டைப்பச்சா என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே.

முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும், மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடல் வேண்டும்.

முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக் கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்றுபெயர்.

அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்து விடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங்
குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.

மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், கோடு என்னுங் குற்றமாம். அதை 'லைன்' (line) அல்லது 'லாக்' (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும்போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.

ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றை யொன்று தொட்டுக் கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்ற வனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டில் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.

விளையாட்டின் பயன்  : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டு நிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ் வாட்டின் பயனாம்.

                                                                                                            தொடரும் .................

No comments:

Post a Comment