Tuesday, April 10, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 5

பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

அஞ்சல குஞ்சம்

விளையாட்டின் பெயர்  : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது 'அஞ்சல குஞ்சம்' என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே
பெயராகக் கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது 'ஒற்றைக் குழியாட்டம்' எனவும்படும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். 

விளையாடும் இடம்  : பேந்தாவிற்குரியதே இதற்கும்.

விளையாட்டு பொருள்  : பாண்டிநாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.

விளையாடும் முறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலை விலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும்.

ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்துவிட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.

முதலில் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குல் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குல் போட்டுவிடின் நான்காம்.

நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண் வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல்.

நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின் 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்; 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், 

மீண்டும் நான்காம். குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது,

ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண்வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை,

அஞ்சல குஞ்சம்,

அறுவக்க தாடி,

எழுவக்க மைனா,

எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை)

தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி).

தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம்.

பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப்பட்ட கோலிக்காரன் முட்டி தள்ள வேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக் கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக்கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்திவிடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம்.

பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும் போது,  எதிரி தன் கோலி நெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக் கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும்.

முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குல் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும்

அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டி தள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும்

அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு.

முதன்முறை 3 அடி 3 தள்ளு

2ஆம் முறை 2 அடி 2 தள்ளு

3ஆம் முறை 1 அடி 1 தள்ளு

4ஆம் முறை 1 அடி 3 தள்ளு

முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குல் கொண்டு வந்து நிறுத்த முடியா விடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிற வனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் "போதாது" என்று சொல்லின்,தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்து வைத்துப் "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் 

மீண்டும் "போதாது" என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் தெரியாமல், "போதாது", "போதாது" என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத் தள்ளுகிறவன் தன் இரு கைகளை யும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, 

இறுதியில் கோலிக் கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக் கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, "போதும்" என்பான்; 

உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; 

அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுவான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.

தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.

                                                                                                                 தொடரும்...................

No comments:

Post a Comment