Sunday, March 25, 2012

நாம் யார் -37

பாகம்-36 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இனஇழிபு

முதல் நிலை 

பார்ப்பாரும் அந்தணரும் (ஐயரும்) பிராமணரேயென்று,தமிழப் பார்ப்பாரும் அந்தணரும் தம்நிலையினின்று தள்ளப்பட்டமை.

இரண்டாம் நிலை 

உழுவித்துண்ணும்வேளாளராகிய வெள்ளாளரும் சூத்திரருள் அடக்கப் பட்டமை.

மூன்றாம் நிலை

 அரசரும் வணிகரும்உட்படத் தமிழ ரெல்லாரும் சூத்திரர் எனப்பட்டமை.
வெள்ளாளர் தம்மை உயர்த்தக் கருதிச்சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டது சிரித்தற்குரிய செயலாம்.

நாலாம் நிலை 

 இசை நாடகத்தொழிலும் உழவுத் தொழிலுஞ் செய்து வந்த சிலவகுப்பாரைத் தீண்டாராக்கி, அவரை ஐந்தாங்குலத்தினர் (பஞ்சமர்) என்றமை.
முதற்கண் பாணரும், பின்னர்ப் பறையரும், அதன்பின் பள்ளரும் தீண்டாராக்கப் பட்டனர். இறுதியில் சான்றாரையும் தீண்டாராக்கத் தொடங்கினர். ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் கிறித்தவ நெறியும் பரவியதால், சான்றார் விழித்தெழுந்து தப்பிக்கொண்டது மன்றித் தம்மை உயர்த்தியுங்கொண்டனர்.

சில வகுப்பார்தீண்டாராகவே,அவருக்குப் பணி செய்யும் வண்ணானும் மஞ்சிகனும்(மயிர்வினைஞனும்) ஆகிய குடிமக்களும், பூசை செய்யும்பண்டாரமும் தீண்டாராயினர்.

ஐந்தாம் நிலை 

தீண்டார் நாளடைவில் பிராமணருக்குக் காணார் ஆக்கப்பட்டனர். அதனால், தீண்டுவார் ,தீண்டார் ,அண்டார்,காணார் எனத் தமிழர் பிராமணரை நோக்கி நால்வகைப்பட்டனர்.

ஆறாம் நிலை

தீண்டார் மேல் வகுப்பாரான தமிழருள்ளும் சிலர்க்கு 30 எட்டுத்தொலைவிலும் சிலர்க்கு 60 எட்டுத் தொலைவிலும் விலகி நிற்க நேர்ந்தது.

ஏழாம் நிலை 

மலையாள நாட்டுத்தீண்டாருள் ஒரு வகுப்பாரான நாயாடிகள், தமிழருக்கும் அல்லது மலையாளியர்க்கும் காணார்ஆயினர். தாழ்த்தப்படாத தமிழக் குலத்தாருள்ளும்,உயர்வு தாழ்வுபற்றி ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டது.

பிராமணர்,நிறத்திலும் துப்புரவிலும் நாகரிகத்திலும் தமக்கு எத்துணையும் தாழ்வில்லா மரக்கறி வெள்ளாளர் சமைத்ததையும் தொட்ட உணவை கூட இன்றும் உண்பதில்லை. தமிழருள் மரக்கறி வெள்ளாளரே தலைமையாகக் கருதப்படுபவர். அவருந் தாழ்த்தப்பட்டதனால், தமிழினம் முழுதும் தாழ்த்தப் பட்டதேயாகும். இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே யாவர். 

பிராமண உணவுச்சாலைகளில், முதலில்,தமிழர் தலைவாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர் மறைவான உள்ளறையிலும் படைக்கப்பட்டனர். அன்று,பிராமணர் எச்சிலையினின்று கறிவகைகள் எடுத்துத்தமிழர்க்குப் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் கண்ணாரக் கண்டு, தாமரைத் திரு. வ.சுப்பையாப் பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். நாகர்கோவில் வாணரான ஆறுமுகம் பிள்ளை என்னும் தொடக்கப்பள்ளி யாசிரியர், ஒருபிராமண உணவுச் சாலைக்கு உண்ணச் சென்றபோது, இத்தகைய இழிசெயலைக் கண்ணாரக் கண்ட அவருடைய பிராமண நண்பர், அவரை உண்ண வேண்டா வென்று தடுத்ததாக, அவர் காலஞ் சென்ற பர். இராசமாணிக்கனாரிடம் சொல்லியிருக் கின்றார். தில்லைஇராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் திரு. சாமிநாத முதலியாரும்,அவர்தந்தையார் ஒரு பிராமணர் வீட்டில் இத்தகைய இழிநிலைக்கு ஆளாக விருந்து தப்பியதாக சில புத்தகக் குறிப்பில் இருக்கிறது

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தில்லையில் ஒரு பிராமண உணவுச் சாலையில் ,'பிராமணர்க்கு மட்டும்' என்று ஒரு பலகை தொங்கவிடப்பட்டு இருந்தகாக சொல்லபடுகிறது

1928-லிருந்து 1934 வரை இராசமன்னார்குடி பகுதியில் , கீரங்குடிக் கோபாலையர் உண்டிச்சாலையில், தமிழர்க்கு எடுப்புச் சாப்பாடும் இல்லா -திருந்துள்ளதாம்.

தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும், பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, "என்குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது" என்றும்,"எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக்கூடாது" என்றும், "மேலாடையை வல்லவாட்டாக அணியக் கூடாது" என்றும், "திருமணவூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது" என்றும்,"குடை கொடி பிடிக்கக்கூடாது" என்றும், பலவாறுபிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர்.

வலங்கை இடக்கை வழக்காரம்

குலப்பட்டம், குடை ,கொடி ,பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்லவாட்டு, செருப்பு ஆகியவை பற்றிக்குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர்கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம்அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது.

இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும், இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருதஇடமுண்டு.

சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்ததுள்ளது . 1809ஆம் ஆண்டு சூலை மாதம் 25ஆம் தேதி , செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத்தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (GeorgeColman) துரை, அவ் வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ் செய்துள்ளார்.

வலங்கைக் குலங்கள்

வேளாளன், அகம்படியான், இடையன், சாலியன், பட்டணவன், சான்றான்,
குறவன், குறும்பன்,  வள்ளுவன், பறையன் முதலியன.

இடங்கைக்குலங்கள்

கம்மாளன், பேரிச் செட்டி, நகரத்துச் செட்டி, கைக்கோளன்,பள்ளி (வன்னியன்),
வேடன்,  இருளன், பள்ளன்,  இரட்டைமாட்டுச் செக்கான் முதலியன. 

இடங்கையினும் வலங்கை பெருங்கை.மேளகாரன், கணிகை (தாசி), பணி செய்வோன் முதலிய குலங்களில் இருகையு முண்டு. ஒருசில குலங்களில் ஆடவர் ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னடநாடுகளிலும் இவ் வகுப்புகள் இருப்பதால், அந்நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடாயிருந்தமை அறியப்படும்.

"இத் தமிழ்நாட்டில் ஒவ்வொருநகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை யார் , வலங்கை யார் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவி ல்மற்றொருவர் வசிப்ப தில்லை. 

சுபாசுபப்பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீதி வழியாகமற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங்கொண்டு போவ தில்லை. கருமாதி யிலுமப்படியே. இருவருக்கும் பொது வாயுள்ள வீதியில் போவதற்குத் தடையிராது. சுவாமிகளுக்கு உற்சவாதிகளும்அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலே தான் நடத்துவார்கள்"

கல்வியிழப்பு

வேதம் முதலிய பன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன் வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன.தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்வி சாலையும் ஏற்படுத்த வில்லை.

நடுநிலை நயன்மை யிழப்பு

மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக் குற்றவாளிக்குக்கொலைத் தண்டனை யிட்டதனால்,அப் பிராமணன் ஆவி அவனை நெடுநாள் அலைக் கழித்ததென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது. மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் கொலைத் தண்டனையில்லை யென்று சட்டமிருந்தது.

முன்னேற்றத் தடை

 தமிழன் தன்முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையையுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில் தான் மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில் தவஞ்செய்து வைசியனாகலா மென்றும். இங்ஙனமேவைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்ற பின்னரே இறுதியிற் பிராமணனாக முடியு மென்றும், ஒருதிரிவாக்கக் (Evolution)கொள்கை புகுத்தப்பட்டது. இதை நம்பி ஏராளமானபொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர் எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல்கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித்தடையாகும். 

                                                                                                தொடரும்...................

No comments:

Post a Comment